திங்கள், 23 மே, 2016

ஸ்டாலினுக்கு கிடைத்தது உரிய இடமா?

ஜெயலலிதாவும் 28 அமைச்சர்களும் இன்று பதவி ஏற்றார்கள். யாருமே எதிர்பார்க்காதவண்ணம் எதிர்க்கட்சிக்கு அழைப்புவிடுத்திருந்தார்கள். இது திமுகவுக்கு மட்டுமல்ல…. அதிமுகவினருக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். காலமும், அனுபவங்களும் அனுபவத்தால் ஏற்படும் மன முதிர்ச்சியும் இப்படியான பண்பாடுமிக்க முடிவுகளை எடுக்கத் தூண்டியிருக்கலாம். இல்லையென்றாலும் அது வழக்கம்போல அரசியல் ஆலோசகர் சோ.ராமசாமியின் வழிகாட்டுதலாகவும் இருந்தாலும் இந்த முடிவும் அழைப்பும் வரவேற்கபடக்கூடியதே. காரணம், எம்ஜியாரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவிலேயே ஜெயலலிதாவுக்குக் கிடைத்த மரியாதை தெரியும். எம்ஜியாரின் உடல் அருகே உட்கார்ந்திருந்தவரை கட்டாயப்படுத்தி அந்த வண்டியிலிருந்து கீழே இறக்கிவிட்டனர். என்னசெய்வதென்று தெரியாத ஜெயலலிதா வீட்டுக்குத் திரும்பி போனார். 1987ல் இப்படி அவமானப்பட்ட ஜெயலலிதாதான் இன்று 4வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளார்.
முதல்முறை 1991ல் பதவியேற்றபோது இருந்த மனப்பக்குவம் இன்று மாறியிருக்கிறது என்று ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், ஒரு எதிர்கட்சியில் பெருவாரியான வெற்றியைப் பெற்ற திமுகவிலிருந்து பதவி ஏற்புவிழாவுக்கு வருகைபுரிந்த திமுகவின் பொருளாலர் ஸ்டாலினுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. தொழிலதிபர்களுக்கும் அக்கட்சியின் சினிமா நடிக, நடிகைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் கூட ஸ்டாலினுக்குக் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது; வருத்தமளிக்கக்கூடியது. ஆனால், இதை பெரும்பான்மையான பத்திரிகைகளும் ஊடகங்களும் கண்டுகொள்ளாது. ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் இந்த மௌனம் வெட்கப்பட வேண்டிய விஷயம்.
அடுத்து, அவர் ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார்.(அதை எவ்வளவு close upஆக காண்பிக்க இயலுமோ அத்தனை நெருக்கத்தில் காட்டியிருகிறார்கள். இது இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல்முறை) விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து, வீடுகளில் 100 யூனிட்வரை மின் கட்டணம் கிடையாது, முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடல், பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்ற பெண்களுக்கு 8கிராம் தாலிக்குத் தங்கம், 50000 ரூபாய் பணம், கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும் விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்துதல் என யாரும் யூகிக்காத, எதிர்பார்க்காத கோப்புகளில் கையெழுத்திட்டு மக்கள் மனதில்’ இனிவரும் ஐந்து ஆண்டுகளும் நல்லாட்சி அமையலாம்” என்ற நம்பிக்கையை ஏர்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், வறுமையில் உழன்று வரும் பலரின் நெஞ்சத்தில் நம்பிக்கையை வார்க்கும் திட்டம். இதன்மூலம் பள்ளிக்குழந்தைகள் பாதியிலேயே நிற்கும் பிரச்னை குறையும் வாய்ப்பு இருக்கிறது.
இப்படி நம்பிக்கையோடு முதல்நாளை ஆரம்பித்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா அவரின் பிரச்சாரத்தின்போது கடும் வெயிலால் பாதிகப்பட்டு இறந்த 7 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதுதான் நீதி, நியாயம். அதைத்தான் அந்த குடும்பங்களும் எதிர்பார்க்கும்.
ஐந்து ஆண்டுகளும் இந்த அரசு முழுமையாக செயல்படும் அரசாக இருக்கவேண்டும் என்பதுதான் எல்லா மக்களின் நியாயமான எதிர்பார்ப்பும். குறிப்பாக, சட்டசபையை முறையாக நடத்துவதுதான். ஏனென்றால் ஆளும்கட்சிக்கு சவால்விடும் வகையில் எதிர்கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகம். அந்த எண்ணிகையைப் பார்த்து பயந்துவிட்டார்கள் என்று எதிர்கட்சியினர் ஒருநாள் கூட கருத்து சொல்லவோ, அறிக்கைவிடவோ வாய்ப்பளிக்காமல் சட்டசபையை கூட்டி, மக்களுக்கான செயல்திட்டங்களை நிறைவேற்றுவார் ஜெயலலிதா என்றே நம்புவோம்.


சனி, 21 மே, 2016

பெண்கள் ஏன் இரண்டாம்பட்சமாகவே நடத்தப்படுகிறார்கள்?

முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து ஆளுங்கட்சியாக இருந்த கட்சியே ஆளும்கட்சியாக மீணும் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது என்று சந்தோஷப்பட்டுக்கொண்டே, பெண்களின் தலையில் குட்டு வைக்கிறார்கள்.
தமிழக அமைச்சரவைப் பட்டியலை அறிவித்துவிட்டார்கள். மிகவும் சந்தோஷப்படக் கூடிய விஷயமாக மூன்று பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் சரோஜா, ஸ்ரீரங்கம் இடைதேர்தலில் வெற்றிக்கனியைப் பறித்து வந்து அம்மாவிடம் சமர்பித்த எஸ். வளர்மதி, சாதி சான்றிதழை மாற்றியதாகக் கூறப்பட்ட சங்கரன்கோயில் ராஜலட்சுமி ஆகியோர் தான் அந்த மூன்று அமைச்சர்கள்.

இவர்கள் மூவரும் முதல்முறையாக அமைச்சர்களாகிறார்கள். டாக்டர் சரோஜாவுக்கு சமூகநலத்துறையும், ராஜலட்சுமிக்கு ஆதிதிராவிட நலத்துறையும், எஸ். வளர்மதிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளுக்கு மேலாகியும், பெண்கள் அரசியல் முதல் ஆவியியல் வரை பலதுறைகளில் கால்பதித்து ஆண்களுக்கு நிகராக தங்கள் திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் பெண்களுக்கு ஏன் திரும்பத் திரும்ப அதே துறையே வழங்கப்படுகிறது? கடந்த ஆட்சியில் பா. வளர்மதிக்கு இதே சமூகநலத்துறையும் சத்துணவும். கோகுல இந்திராவுக்கு ஜவுளித்துறைதான் கொடுக்கப்பட்டது.

அதற்கு முன்னிருந்த திமுக ஆட்சியில் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை கொடுத்தது. ஆனால் அவர் தொழில்முறை மருத்துவர். தமிழரசிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டது. அரசியலில் நல்லஅனுபவமும், களத்தில் இறங்கி செயல்படும் செயல் வீராங்கனையாகவுமிருந்த சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஜவுளித்துறைதான் வழங்கப்பட்டது. வாரிசு அரசியலை அடியொற்றி வந்த கீதாஜீவனுக்கும் சமூகநலத்துறையைத்தான்  திமுக அரசு வழங்கி கௌரவித்தது. சிறந்த பேச்சாளாரான எஸ். பி. சற்குணபாணியனுக்கும் அதே சமூகநலத்துறைதான் வழங்கப்பட்டது. இந்த சமூகநலத்துறையின் கீழ்தான் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு எல்லா நல உதவிகளையும் வழங்கி அவர்களை மேம்படையச் செய்வதுதான் இவர்களது வேலை. அடித்தட்டு மக்களுக்கான கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு என பலவற்றுக்கும் இந்ததுறைதான் பணிபுரிய வேண்டும். இது கிட்டத்தட்ட ஒரு சேவைத்துறை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை இவர்கள்தான் செயல்படுத்துவார்கள்.
இன்றளவும் வீடு என்றாலே அங்கும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை பெண்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டாலும் இதே வேலையைத்தான் செய்ய வேண்டும். அதனால்தான் ஆண் முதலமைச்சர் ஆக இருந்தாலும் சரி, பெண் முதலமைச்சர் ஆக இருந்தாலும் சரி பெண் அமைச்சர்களுக்கு இப்படி ஒரு மென்மையான துறையையே கொடுப்பது என்பது வழக்கமாகிவிட்டது. இது ’பெண் என்றால் இவ்வளவுதான்’ என்று சமூகம் காலம்காலமாக நம்பி வரும் மூடநம்பிக்கையை வலுப்படுத்துவதாகவே உள்ளது. பெண்களுக்கு அரசியல் தெரியும் போது, அறிவியல் புரியும்போது…. ஏன் அவர்களை ஒரு ஓரமாகவே தள்ளிவைத்திருக்க வேண்டும்?

முதமுறையாக அமைச்சராகும் ஆணுக்கு உடனே பொறுப்பு மிகுந்த கல்வித்துறை வழங்கப்படுகிறது. காலம்காலமாக ஆண்களே இந்தத்துறையில் இருப்பதனால்தான், பள்ளிக்கூடங்களில் கழிப்பறை மிக முக்கியம் என்கிற உண்மை இன்றுவரை புரியாமலேயே இருக்கிறது. கழிவறை இல்லாததால், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்ட பெண்கள் கிராமங்கள்தோறும் இருக்கிறார்கள். அதிலும் பெண் ஆசிரியர்கள் படும்பாடு சொல்லிமாளாது. இப்படி பல நுண்ணிய விஷயங்களை கூர்ந்துநோக்கும் திறன் ஆணை விட பெண்ணுக்கு அதிகம் என்று அறிவியலும் சொல்லிவிட்டது; அனுபவமும் சொல்லிவிட்டது. இருந்தாலும் ஆண்கள்தான் இந்தந்தத் துறையை கையாள வேண்டும் என்று ஏன் நிர்ணயம் செய்ய வெண்டும்? அப்படியானால் பெண்களுக்கு பொதுப்பணித்துறை, நிதித்துறை, சட்டத்துறை போன்ற பெரிய துறைகளில் ஆளுமை குறைவு என்று சொல்லாமல் சொல்கிறீர்களா?
1950-60 களில் தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராக காமராஜர் தலைமையிலான ஆட்சியில் பொறுப்பேற்ற ஜோதி பொது சுகாதாரம், மதுவிலக்கு மற்றும் பெண்கள் நல அமைச்சராகப் பொறுப்பேற்று தன்னை நிரூபித்தார்.

தமிழ்நாட்டில் இன்று மதுவிலக்கு பெரும் பிரச்னையாக மாறிவரும் சூழலில், அதை ஒரு ஆனை நம்பிக் கொடுத்திருப்பதை விட, ஒரு பெண்ணீடம் கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக மிகச் சரியான தீர்வு கிடைக்கும். ஆனால் அதெல்லாம் நடக்குமா?
இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி இரண்டாம்பட்சமாகவே பெண்களை எல்லா இடங்களிலுமே நடத்துவீர்கள்?


இவர்களெல்லாம் வரிசையில் நிற்கக் கூடாதா?

’’ஸ்டாலின் குடும்பத்துடன் வரிசையில் நின்றார். அஜித் குடும்பத்துடன் வரிசையில் நின்றார்’’. -செய்தி
அய்யா இதை எழுதுற படம்பிடிக்கிற நீங்களும் வரிசையில் நின்றுதானே ஓட்டுப்போடுறீங்க? அரசியலில் ஸ்டாலின் இருக்கிறார் என்பதாலோ, அஜீத் சினிமா நடிகர் என்பதாலோ அவர்களுக்கு ஸ்பெஷல் ஓட்டு ்ி இல்லையே. 

ஸ்டாலின் வரிசையில் நின்று ஓட்டுப் போடுவது ஒரு தலைவராக மக்களுக்கு அவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான் என்று சொன்னால் கூட பரவாயில்லை. ஏதோ அவர் தேவ தூதர் போலவும் அவர் வரிசையில் நின்றதே அதிசயம் போலவும் எத்ற்கு சொல்லிக்கொண்டே அலைய வேண்டும்?
உலகநாடுகளில் ஜனநாயகக் கடமையை செய்ய வரும் அனைவரும் வரிசையில் நின்றுதான் ஓட்டுப் போடுகிறார்கள். அதில் ஒபாமா, கிளின்டன் என யாரும் விதிவிலக்கல்ல. அங்கு அது பெரும் செய்தியாவது இல்லை...இங்குபோல. நம்மின் இந்த வழிபாட்டு மனோபாவம் ஒழிகின்ற அன்றுதான் இம்மாதிரியான செய்திகள் ஒழியும்.
ஆனால் மாறாக இந்த வழிபாட்டு மனோபாவத்தை வளர்த்தெடுத்துக்கொண்டே இருக்கின்றன அரசியல்வாதிகளும் அவர் சார்ந்த கட்சிகளும். 

செலிபிரட்டிகளும் நம்மை போன்ற மனிதர்கள்தாம் என்று உணர்ந்தால்தான் இந்த வழிபாட்டு மனோபாவத்தை கொஞ்சமாவது அழிக்க முடியும். அவர்களை அரசியல்வாதிகளாகவும் செலிபிரட்டிகளாகவும் ஆக்கியதே நாம்-மக்கள் தான் என்பதை மறக்க வேண்டாம்

பாவபுண்ணிய கணக்கு

குப்புசாமி மகன் ராமசாமிக்கு
புற்றுநோய்னு ரெண்டுமாசமா
கவர்மெண்டு ஆஸ்பத்திரியில 
பாயோட பாயா சுருண்டு கெடக்கான்
உயிர்காக்கும் மருந்து வாங்க
பணமில்லாம எப்ப வேணாலும்
பரலோகம் போவானாம்
பாவி மகன்.

மகேஸ்வரி மக உமா
மூணு வயசு முடியறதுக்கு முன்னாடியே
சத்துக்கொறைவால
மூச்ச இழுத்து இழுத்து
உயிரவிட்டான்னு
ஊரே கூடிநின்னு ஒப்பாரி வைக்குது.
ரெண்டு வருஷமா
குண்டுமணி வெள்ளாம இல்லயின்னு
காவேரிகரையோரம் வாழுற
நாப்பது குடியானவனங்க
சத்தமில்லாம செத்துபோயிட்டாங்க
ஒருவரி செய்தி கூட வரலேன்னு
செத்தவனுக்குத் தெரியாது.
இந்த மக்க வாழுற
அதே மண்ணுலதான்
கேப்பாரில்லாம நாலுநாளா நிக்குது
கட்டுக்கட்டா பணத்தோட
கண்டெய்னர் லாரி மூணு
பாவபுண்ணிய கணக்கெல்லாம்
பணத்துக்குக் கிடையாது
அத வச்சிருக்கிறவனுக்குமா
எதுவுமே கிடையாது?

வரலாற்று வெற்றியும் மக்கள் எதிர்பார்ப்பும்

போயஸ் தோட்ட வீட்டில் ஜெயலலிதா வெற்றியின் புன்னைகையோடு அமர்ந்திருக்கிறார். அதிகாரிகள் வண்ண வண்ண மலர்செண்டுகளுடன் கும்பிடு போடுகிறார்கள். அதில் ஒருசிலர் இப்போதுதான் புதிதாக குனியக் கற்றுக்கொண்டார்கள் போலும்.. அத்தனை திருத்தமாக குனியமுடியவில்லை. ஒரு ரோஸ் கலர் சேலை அணிந்த பெண்மணி பூங்கொத்தை கொடுத்து முடித்து, ஜெயலைதாவைப் பார்த்து கைகளை விரித்து ஒரு சிறு ஆட்டம் போட, ஜெயலலிதாவின் முகத்தில் அப்படியொரு சிரிப்பு. அநேகமாக அண்மைகாலத்தில் அவர் இத்தனை சந்தோஷத்துடன் சிரித்தது அப்பெண்ணால்தான்.
நன்றி சொல்லும்போது, ‘’நன்றி என்று சொல்வதற்கு மிகச் சரியான வார்த்தை தமிழ் அகராதியிலேயே இல்லை… என் உள்ளத்தின் அடியாழத்தில் இருந்து நன்றி சொல்கிறேன். மக்களுக்காகவே என் வாழ்வை அர்பணிக்கிறேன்’’ என்று எந்த கையில் எந்த ஸ்கிரிப்ட்டும் இல்லாமல் சொன்னார். தமிழில் சொன்னதை அப்படியே ஆங்கிலத்திலும் சொன்னார். சொன்னதுக்குப் பிறகு….பொக்கே வழங்கியவர்களில் சிலர் காலில் விழுந்தார்கள். ஜெயலலிதா எப்போதும் போல் காலில் விழுவதை கண்டுகொள்ளாமல் பொக்கேவைத் தொட்டுக்கொண்டிருந்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியின் மக்கள் நல செயல்பாடுகளால் அதிமுக இந்த வெற்றியைப் பெற்றுவிடவில்லை என்று ஜெயலலிதாவுக்கே நன்கு தெரியும். பணத்தை திமுகவை விட அதிக அளவில் வீடுவீடாக வாரி இறைத்து, தெளித்துப் பெற்ற வெற்றிதான் இது. மக்கள் இந்தக் கட்சி ஆட்சியில் இருந்தால் நமக்கு பல நன்மைகளை செய்வார் என்ற நம்பிக்கையில் ஆட்சியில் இவரை அமரவைத்தார்களா? வெற்றி பெறச் செய்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
கடந்த ஐந்தாண்டுகளில் TNPSC மூலமாக பெரிய அளவில் அரசுவேலை வாய்ப்புகளை வழங்கவில்லை. இன்னும் 88 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றிதான் இருக்கிறார்கள். தொழில்துறையில் புதிய புரட்சி எதுவும் நடந்துவிடவில்லை. புதிய உலக கம்பெனிகள் எதுவும் எங்கும் தொடங்கப்படவில்லை. கடைசி நிமிடத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு என்பதை பெயரளவில் நடத்தி, ‘இத்தனை லட்சம் கோடி முதலீடு வந்தது’ என்பதை பேப்பரில் மட்டுமே படிக்க முடிந்தது. நிஜத்தில் என்ன நடந்தது என்பதை யார் அறிவார்கள்?
அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்தபோது அமைச்சர்களை ஈவு இரக்கமின்றி மாதம் ஒருவராகத் தூக்கியெறிந்து இன்னொருவரை தூக்கிவைத்தார். அதனால் இன்று வரை எந்தத் துறைக்கு எந்த அமைச்சர் என்பது தமிழ்நாட்டில் ஒரு வாக்காளருக்குக் கூட நினைவில் இல்லை. இருந்தால் அவர் 7 கோடிகளில் ஒருவர்.
ஊழல் வழக்கில் கைதாகி அவர் சிறையில் இருந்த போதும், சிறையிலிருந்து வெளிவந்த போதும் அரசு பெரிதாக இயங்கவில்லை. 110 விதி பெரிதாக இயங்கியது. வெள்ளத்தின் போது அடுத்தவன் வீட்டு பொருட்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அதையெல்லாம் மீறி இன்று ஜெயலலிதா வெற்ரிபெற்றுள்ளார் என்றால்…. அது பணத்தால் மட்டும் ஈட்டப்பட்ட வெற்றி என்பதை யாருமே மறுக்கமுடியாது… ஜெயலலிதா உள்பட.
இந்த வெற்றிக்குப் பிறகாவது அவர் மக்களிடம் சொன்ன வாக்கின்படி சொன்னதில் பாதியையாவது செய்ய வேண்டும் என்பதுதான் சாமனிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஏழை மக்களும் எல்லாவற்றையும் வாங்கும் அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருக்க வேண்டும்…அட்லீஸ்ட் பால் விலையாவது!
அதிமுகவுக்கு கிட்டத்தட்ட நெருக்கமான இடங்களைப் பிடித்து மாபெரும் எதிர்க்கட்சியாக விளங்கும் திமுகவின் கையில்தான்… அவர்கள் சட்டமன்றத்தில் எழுப்பும் குரலில்தான்.... தமிழக மக்களின் ஒட்டுமொத்த நலனும் எதிர்காலமும் இருக்கிறது.
டாஸ்மாக்… இருப்பதும் ஒழிவதும் அழிவதும் முழுக்க முழுக்க திமுகவின் கையில்தான் இருக்கிறது. ரெடி..ஸ்டார்ட்!

திமுக இந்த தேர்தலில் பின்தங்க முக்கிய காரணங்கள்

# ஊழலின், அராஜகத்தின் பிரதான அடையாளமாகக் கருதப்படும் தயாநிதி, கருணாநிதியின் ்பரப்புரையின்பொது உடன் சென்று எல்லாவற்றையும் நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.
# தேர்தல் நேரத்திலும் அழகிரியை கட்சியை விட்டு ஒட்டுமொத்தமாக தள்ளிவைத்தது.
# பிரதான பேச்சாளரான கருணாநிதிக்கு மாற்றாக அதே அளவுக்கு ஈடுகொடுக்கும் சிறந்த பேச்சாளரை கண்டுபிடிக்காதது.
# ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மக்களை ஈர்க்கும்விதமாக இல்லாதது. அவருடைய காஸ்ட்யூம் ஈர்த்த ஆளவு அவருடைய பேச்சு ஈர்க்கவில்லை.
# இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட பே்ச்சாளர்களிலும் குறிப்பிடத்தக்க பேச்சாளர்கள் இல்லாதது.
# பரப்புரையில் கடந்த ஆட்சியில் திமுக செய்த நல்ல செயல் திட்டங்களை ஆரம்பத்திலேயே மக்களிடம் கொண்டு சேர்க்காதது.
# மிக முக்கியமான காரணம், ’தூக்கி வளர்க்கும் துயர’மாக காங்கிரஸை மடியில் கட்டி அலைந்தது
# அதிருப்தி வேட்பாளர்களுக்காக களத்தில் உத்வேகத்துடன் தொண்டர்கள் வேலை செய்யாதது.
# சில இடங்களில் ’இந்த தொகுதியில் நாம் ஜெயிக்கமாட்டோம்’ என்று தொண்டர்களும் கட்சி பிரமுகர்களும் பணத்தை அப்படியே வைத்துக்கொண்டது.