திங்கள், 23 மே, 2016

ஸ்டாலினுக்கு கிடைத்தது உரிய இடமா?

ஜெயலலிதாவும் 28 அமைச்சர்களும் இன்று பதவி ஏற்றார்கள். யாருமே எதிர்பார்க்காதவண்ணம் எதிர்க்கட்சிக்கு அழைப்புவிடுத்திருந்தார்கள். இது திமுகவுக்கு மட்டுமல்ல…. அதிமுகவினருக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். காலமும், அனுபவங்களும் அனுபவத்தால் ஏற்படும் மன முதிர்ச்சியும் இப்படியான பண்பாடுமிக்க முடிவுகளை எடுக்கத் தூண்டியிருக்கலாம். இல்லையென்றாலும் அது வழக்கம்போல அரசியல் ஆலோசகர் சோ.ராமசாமியின் வழிகாட்டுதலாகவும் இருந்தாலும் இந்த முடிவும் அழைப்பும் வரவேற்கபடக்கூடியதே. காரணம், எம்ஜியாரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவிலேயே ஜெயலலிதாவுக்குக் கிடைத்த மரியாதை தெரியும். எம்ஜியாரின் உடல் அருகே உட்கார்ந்திருந்தவரை கட்டாயப்படுத்தி அந்த வண்டியிலிருந்து கீழே இறக்கிவிட்டனர். என்னசெய்வதென்று தெரியாத ஜெயலலிதா வீட்டுக்குத் திரும்பி போனார். 1987ல் இப்படி அவமானப்பட்ட ஜெயலலிதாதான் இன்று 4வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளார்.
முதல்முறை 1991ல் பதவியேற்றபோது இருந்த மனப்பக்குவம் இன்று மாறியிருக்கிறது என்று ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், ஒரு எதிர்கட்சியில் பெருவாரியான வெற்றியைப் பெற்ற திமுகவிலிருந்து பதவி ஏற்புவிழாவுக்கு வருகைபுரிந்த திமுகவின் பொருளாலர் ஸ்டாலினுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. தொழிலதிபர்களுக்கும் அக்கட்சியின் சினிமா நடிக, நடிகைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் கூட ஸ்டாலினுக்குக் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது; வருத்தமளிக்கக்கூடியது. ஆனால், இதை பெரும்பான்மையான பத்திரிகைகளும் ஊடகங்களும் கண்டுகொள்ளாது. ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் இந்த மௌனம் வெட்கப்பட வேண்டிய விஷயம்.
அடுத்து, அவர் ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார்.(அதை எவ்வளவு close upஆக காண்பிக்க இயலுமோ அத்தனை நெருக்கத்தில் காட்டியிருகிறார்கள். இது இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல்முறை) விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து, வீடுகளில் 100 யூனிட்வரை மின் கட்டணம் கிடையாது, முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடல், பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்ற பெண்களுக்கு 8கிராம் தாலிக்குத் தங்கம், 50000 ரூபாய் பணம், கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும் விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்துதல் என யாரும் யூகிக்காத, எதிர்பார்க்காத கோப்புகளில் கையெழுத்திட்டு மக்கள் மனதில்’ இனிவரும் ஐந்து ஆண்டுகளும் நல்லாட்சி அமையலாம்” என்ற நம்பிக்கையை ஏர்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், வறுமையில் உழன்று வரும் பலரின் நெஞ்சத்தில் நம்பிக்கையை வார்க்கும் திட்டம். இதன்மூலம் பள்ளிக்குழந்தைகள் பாதியிலேயே நிற்கும் பிரச்னை குறையும் வாய்ப்பு இருக்கிறது.
இப்படி நம்பிக்கையோடு முதல்நாளை ஆரம்பித்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா அவரின் பிரச்சாரத்தின்போது கடும் வெயிலால் பாதிகப்பட்டு இறந்த 7 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதுதான் நீதி, நியாயம். அதைத்தான் அந்த குடும்பங்களும் எதிர்பார்க்கும்.
ஐந்து ஆண்டுகளும் இந்த அரசு முழுமையாக செயல்படும் அரசாக இருக்கவேண்டும் என்பதுதான் எல்லா மக்களின் நியாயமான எதிர்பார்ப்பும். குறிப்பாக, சட்டசபையை முறையாக நடத்துவதுதான். ஏனென்றால் ஆளும்கட்சிக்கு சவால்விடும் வகையில் எதிர்கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகம். அந்த எண்ணிகையைப் பார்த்து பயந்துவிட்டார்கள் என்று எதிர்கட்சியினர் ஒருநாள் கூட கருத்து சொல்லவோ, அறிக்கைவிடவோ வாய்ப்பளிக்காமல் சட்டசபையை கூட்டி, மக்களுக்கான செயல்திட்டங்களை நிறைவேற்றுவார் ஜெயலலிதா என்றே நம்புவோம்.


4 கருத்துகள்:

  1. பாஸிட்டிவ் வைப்ரேசன் ....

    பதிலளிநீக்கு
  2. நியாயமான எதிர்பார்ப்புகள்... கடந்தமுறையைவிட சிறுசிறு நேர்த்திகள் வெளிப்படுகின்றது. குறிப்பாக பேனர் கலாச்சாரம் தலைதூக்காமல் இருப்பது கொஞ்சம் ஆறுதல். என்ன நடக்கபோகுதுன்னு பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு
  3. எல்லோரிடமும் ஒரு பழக்கம் இருக்கிறது... அனைவரையும் குற்றம் பார்க்கும் குணம்...! தனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...? எதிர் கட்சியான ஸ்டாலின் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை பொறுத்து தான் மரியாதையும்...!!!! கேட்டு பெறுவதல்ல...!!! தானே வருவது....!!!

    பதிலளிநீக்கு