வெள்ளி, 17 ஜூன், 2016

அன்புள்ள தமிழசைக்கு

சமீபத்தில் நீங்கள் உங்கள் கட்சிக்காரர் ஒருவர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, 'இனி வருஷம் 365 நாளும் தலித் வீட்டில் ஒருவேளை சாப்பிடுவேன்' என்று தேர்தல் அறிக்கை போல் அளந்துவிட்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு எம்பிபிஎஸ். டிஜிஒ படித்த மருத்துவர். மருத்துவராக பணிபுரிந்த காலத்தில் இது உயர்சாதி ரத்தம், இது தலித் ரத்தம் என்று ரத்தத்தின் திட, திரவ, நிற அளவை வைத்துக் கண்டுபிடித்திருக்கிறீர்களா? ஒருபோதும் இருக்காது. பாரதிய ஜனதா கட்சியின் சிறு பொறுப்புகளில் இருந்தபோது ஒரு தலித் வீட்டில் சாப்பிட வேண்டும் என்று எண்ணியிருக்கிறீர்களா? நிச்சயமாக தலித்துகள் குறித்து நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள்.
ஆனால், இப்போது தமிழக பாஜகவின் தலைவர் ஆனவுடன் தலித்துகள் மீது உங்களுக்கு பாசம் ஊற்றெடுத்து வருகிறது. இதை எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள் அல்லது ஏன் இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறீர்கள் என்று என்னைப் போல் கேள்வி கேட்பவர்களுக்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது?  நியாயமான, நேர்மையான பதிலை உங்களால் ஒருபோதும் சொல்லமுடியாது என்பது உங்களுக்கே தெரியும். எனென்றால் உங்கள் நடவடிக்கைகளுக்குப் பின்னால் மிகப் பெரிய ஓட்டரசியல் ஒளிந்திருக்கிறது என்று உங்களுக்கும் உங்களை வழி நடத்துகிறவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

அந்த ஓட்டரசியல்தான் உத்திரபிரதேசத்தில் வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்பதை உறுதிசெய்யாமல் கூட அவரை வெட்டிக்கொன்று, அவரது இளைய மகனை காயப்படுத்திய போது, உங்களை வாயைமூடி வைத்திருந்தது. அந்த ஓட்டரசியல்தான் தலித்துகளின் அடிப்படை உணவான மாட்டுக்கறிக்கு எதிராக உங்களை செயல்பட வைத்தது. ஒரு அப்பாவியைக் கொன்றுவிட்டு, அமித்ஷா ஒரு தலித் வீட்டில் சாப்பிட்டார் என்பதை அதீத ஆடம்பரத்துடன் செய்தியாக்கினீர்கள். இப்போது அவர்வழியொற்றி நீங்கள் நடக்கிறீர்கள்.
அதே ஓட்டரசியல்தான் மதரீதியாக தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்பதால் சாதிரீதியாக ஏதாவது குழப்பத்தை உருவாக்க முடியுமா என்று முயன்றுகொண்டிருக்கிறீர்கள். அந்த முயற்சியின் முதல்படிதான், உங்களுக்கு கன்யாகுமரி மாவட்டத்தில் இரு இடங்களில் டெபாசிட் கிடைக்கவைத்தது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகத்தின் மேற்குமாவட்டங்களில் காலூன்ற நீங்கள் செய்யும் சாதிய சூழ்ச்சிகள், ஒவ்வொரு சிறுகிராமத்திலும் கூட பேனர்களாக கோரமாக நிற்கின்றன. மீதமிருக்கும் இந்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் எதையாவது செய்து, உள்ளாட்சி தேர்தலில் உங்கள் பலத்தைக் காட்டவேண்டும் என்றுதான் குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உங்கள் கட்சித்தொண்டர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அதை அலங்கார, அவசர செய்தியாக்கிவிட்டீர்கள். ஆனால், அவர்வீட்டுக்கு சாப்பிடப் போகும் முன்பு ’இதை இப்படி செய்தியாக்குவேன்’ என்று சொல்லியிருக்கமாட்டீர்கள். பாவம் அந்த அப்பாவித் தொண்டரும் நீங்கள் சாப்பிட்டதை மிகப் பெரிய விஷயமாக நினைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு மத்தியில் நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் மதம் மாறிய தலித்துகளை கட்டாயப்படுத்தி, மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றிய கதையெல்லாம் தெரியாது; நினைவில் இருக்காது.  ரோஹித் வெமுலாவை கொன்ற கதை அவருக்குத் தெரியாது. அந்த கொலைக்கும் பாரதிய ஜனதா அமைச்சருக்கும் சம்பந்தமேயில்லையென ஸ்மிரிதிரானி நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டுக் கத்தியது அவருக்குத் தெரியாது. இப்படிப்பட்ட அறியாமையைப் பயன்படுத்தி எப்படியாவது கட்சியை வளர்த்துவிட முடியும் என்று நம்பிகிறீர்கள். அப்படித்தானே?!

ஒரு தலித் வீட்டில் ஒய்யாரமாக உட்கார்ந்து சாப்பிடுவதால் என்ன சமூக மாற்றத்தை நீங்கள் நிகழ்த்திவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்? ’சமபந்தி போஜனமே’ எடுபடாமல் போனதுபோது, கருணாநிதியின் சமத்துவபுரமே எடுபடாமல் போனபோது நீங்களும் அமித்ஷாக்களும் தலித் வீடுகளில் போய் சாப்பிட்டு விடுவதால் தலித்துக்கு என்ன அங்கீகாரம் கிடைத்துவிடுமென இதை வெட்கமின்றி செய்கிறீர்கள். ஓட்டரசியலுக்காக எதையும் செய்யலாம் என்கிற உங்கள் கணக்கு வெல்லுமா?
ஒரு தலைவராக இல்லாவிட்டாலும் ஒரு மனுஷியாக ஆணவக் கொலைகளைத் தடுக்க எதாவதுச் செய்யமுடியுமா என்று யோசியுங்கள். தலித்துகளுக்கான சமூகநீதி எல்லா இடங்களிலும் கிடைக்க குறைந்தபட்சம் எதாவது செய்ய முயற்சியுங்கள். அட்லீஸ்ட், கஷ்டப்பட்டு அம்மாவின் ஒருகிராம் கம்மலையும் விற்றுவிட்டு உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க வரும் ரோஹித் வெமுலாக்களை மதிப்புடன் நடத்த முயற்சி செய்யுங்கள்.

பிகு: நீங்களும் முன்னாள் பட்டியல் இனத்தவர்தான் என்று குத்திக்காட்ட விரும்பவில்லை. தோள்சீலைப் போராட்டம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த வரலாற்றையெல்லாம் முழுமையாக தெரிந்துகொண்டால்தான் உங்களால் சரியான திசையில் செல்லமுடியும் என்பதை சொல்வது எம் கடமை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக