வெள்ளி, 24 ஜூன், 2016

ஆல்வா மிர்டல்

’பள்ளி படிப்போடு முடித்துக்கொள். கல்லூரிக்கெல்லாம் உன்னை அனுப்பிப் படிக்க வைக்க என்னிடம் காசு இல்லை’ என்று அம்மா கல்லூரிப் படிப்புக்கு தடை சொல்கிறார். ‘’நான் மேலே படிக்க பணம் தான் பிரச்னை என்றால் நானே என் செலவில் படித்துக்க்கொள்கிறேன். ஆனால் நான் படிக்கவேண்டும்; படிப்பேன்” என்று உறுதியாக அம்மாவிடம் சொல்லிவிட்டு கல்லூரிப் படிப்பை முடிக்கிறாள் அந்த பெண். காரணம் கல்வியின் மூலம் இந்த உலகில் நிலவும் சமத்துவம் இல்லாத நிலையை மாற்ற முடியும் என்று உறுதியாக நம்புகிறார். அவருடைய நம்பிக்கை விருட்சமானதில் வியப்பில்லை!


ஆல்வா மிர்டல் மிக சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பில்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்யும் அப்பாவுக்கும் நான்கு குழந்தைகளின் தாயாக இல்லத்தரசியாக இருக்கும் அம்மாவுக்கும் 1902ல் பிறக்கிறார். ஆனால் மற்றா குழந்தைகளை விட இவளுக்குள் ஒரு சமூக அக்கறை இருந்துகொண்டே இருக்கிறது. கல்லூரி படிப்பை முடித்ததும், குன்னார் மிர்டல் என்கிற பொருளாதர நிபுணரைத் திருமணம் செய்துகொள்கிறார். இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. எல்லா நடுத்தரவர்க்கப் பெண்களைப் போலவும் ஆல்வாவுக்கு குடும்பப் பொறுப்பு கூடுகிறது. கணவர் மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறார். ஸ்விடனில் பிறந்து, ஸ்வீடனிலேயே மூன்று குழந்தைகளின் தாயாக வாழ்கிற ஆல்வாவுக்கு அத்துடன் தன் படிப்பை முடித்துக்கொள்ள விருப்பமில்லை.

ஸ்வீடன், நாட்டில் இருக்கும் பள்ளிகளின் கல்விமுறை பற்றிப் படிக்கிறார் ஆல்வா. குடும்பம், கல்வி, குழந்தைகள் என சுமைகள் இருந்தாலும் அதனை வென்று வர வழி இருக்கிறது என்று நம்பினார். சைக்காலஜியில் முதுகலை பட்டம் பெற்றார். ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கத் தொடங்கினார். இவர் சைக்காலஜி படித்திருந்த காரணத்தினால் சிறையில் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைக்கிறது. அங்கும்  மூன்று ஆண்டுகள் வேலை செய்கிறார். இருந்தபோதும் அவருக்கு ஆசிரியராக வேலை செய்வதில் அதிக நாட்டம் இருந்ததால், சிறை வேலையை விட்டுவிட்டு, சிறு குழந்தைகளுக்கான ’ப்ரீ ஸ்கூல்’ ஒன்றை நிறுவி, அதில் பல கல்வி மேதைகள் கையாண்ட வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறார்.
இன்று இந்தியாவில் கல்வி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பேசுகின்ற கருத்துகளை 1930களின் இறுதியிலேயே பேசியுள்ளார். ஆதாவது குழந்தைகள் ஆசிரியர் சொல்லித்தருவதை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கருவிகளாக இருக்காமல், நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றியும் சுயமுன்னேற்றத்தைப் பற்றியும் தானாக் யோசித்து முடிவெடுக்கக் கூடிய கல்வியை அரசு வழங்க வேண்டும் என்று பேசினார். அதற்காக புத்தகங்களையும் எழுதினார். குழந்தைகளுக்கு தண்டனை கொடுத்து  ஒழுக்கத்தைப் போதிப்பதை விட, ஒரு நல்ல பழக்கத்தை திரும்பத்திரும்ப கடைபிடிக்க வலியுறுத்தினாலே போதும் என்று ஓங்கி சொன்னார்.

இவ்வாறான இவரின் பல நல்ல சிந்தனைகளால் சிறந்த கல்வியாளராக அறியப்பட்டார். அந்த சூழ்நிலையில் தான் இரண்டாம் உலகப் போரால், அணு ஆயுதங்களால் ஆன பாதிப்புகளை பார்த்து அதிர்ச்சியுற்ற ஆல்வா அதுகுறித்து நிறைய பேசவும் எழுதவும் செய்தார். அந்த காலகட்டத்தில் அமெரிக்காவையும், அப்போது ஒருங்கிணைத்து இருந்த ரஷ்யாவையும் ’உங்களின் அணுஆயுதங்கள் தான் உலகின் அழிவுக்குக் காரணமாக இருக்கிறது’ என்று தைரியமாக எதிர்த்து குரல் கொடுத்தார். இந்த நாடுகள் தன் சுயநலத்துக்காக அணுஆயுதங்களை ஊக்குவிக்கின்றன. அணு ஆயுதங்கள் இல்லாத நாட்டை, சூழலை உருவாக்குவோம் என்று தொடர்ந்து குரல்கொடுக்க ஆரம்பித்தார்.
அணு ஆயுதத்துக்கு எதிரான இவருடைய அழுத்தமான குரலையும் உறுதியையும் பார்த்து வியந்த ஐ.நா மன்றம், இவருடை அறிவை பயன்படுத்த நினைத்தது. இதற்காக யுனெஸ்கோ அமைப்பின் டைரக்டராக நியமித்தது. இதற்காக தன் கல்விப் பணியை இடைநிறுத்தி, ஸ்வீடனில் இருந்து பாரிஸுக்கு தனியாகச் சென்றார்; பணிபுரிந்தார். 1940களின் இறுதியில், அவர் யுனெஸ்கோவில் பணிபுரிந்த போது பெண்ணிய நோக்கில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு இருக்கும் பிரச்னைகள், படிக்காத, ஏழைப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து நிறைய சிந்திகக் ஆரம்பித்தார். ’விமன்ஸ் டூ ரோல்ஸ்” என்ற புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகம் இன்றளவும் நிறைய போராளிகளுக்கு ஒரு பைபிள்.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஸ்வீடன் நாட்டுத் தூதுவராக பணியாற்றி இருக்கிறார். அப்போது நேருவையும் சந்தித்து இருக்கிறார் ஆல்வா. நேருவின் சோசளிசக் கொள்கை இவரை ஈர்த்திருக்கிறது. சர்வதேச அணு ஆயுத தடுப்பு மாநாடு ஜெனிவாவில் நடைபெற்றபோது அதில் ஸ்வீடன் சார்பாக பங்கேற்று தன் கருத்தை மிக வலுவாக எடுத்துரைத்து, பல ஆளுமைகளின் சிந்தனையை தூண்டி இருக்கிறார். இவர் எழுதிய Wars, Weapons, and Everyday Violence, and Dynamics of European Nuclear Disarmament, போன்ற புத்தகங்கள் உலகம் முழுதும் பலரால் வாசிக்கப்பட்டது.

கல்வி மட்டுமே பெண்களுக்கான விடுதலை, உலக நிம்மதிக்கு அணு ஆயுதங்கள் ஒழிய வேண்டும் என்கிற சிந்தனைக்காகவும் அதற்காக பாடுப்படமைக்காகவும் 1982 ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.

ஆல்வாவைப் போன்றவர்களால் நோபல் பரிசுக்குத்தானே பெருமை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக