வெள்ளி, 24 ஜூன், 2016

பாயும் ஒளி நீயெனக்கு

ப்ரியமே!

வெகு நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுக்கு ஒரு நெடிய கடிதம் எழுதுகிறேன். வாசிக்கும் மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்பது பற்றி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை அன்பே! எப்படி இருக்கிறீர்கள், நலமாக இருக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்கவா இந்த கடிதம்? இல்லை என் அன்பே… இல்லவே இல்லை.

என்னை விட்டு நெடுந்தூரம் போய்விட்டீர்கள். இன்னும் நான் அதே இடத்தில் அப்படியேதான் இருக்கிறேன் என்பதை சொல்லவா இந்த கடிதம்…? கண்டிப்பாக இல்லை… இல்லவே இல்லை.

பிறகு எதற்கு இந்தக் கடிதம் என்று கேட்கும் உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை, அன்பை தவிர என்னிடம் எந்த பதிலும் இல்லை என் அன்பே. அன்பே… அன்பே என்று நாடகத்தனமாக நான் விளிக்கிறேனா? இல்லை…இல்லவே இல்லை. அன்பு என்கிற வார்த்தைக்கு முன் நீங்கள் நிற்கிறீர்கள். ப்ரியம் என்று வார்த்தையின் முன் நீங்கள் என்னைக் கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்கிறீர்கள். காதல் என்கிற வார்த்தைக்கு முன் நீங்கள் என்னை முழுவதுமாக களவாடுகிறீர்கள். என்னை வெறும் கடந்தகால நினைவிலேயே வாழ்ந்துகொண்டிருப்பவள் என்று என்னை சுற்றி வாழ்பவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்று கூட ஒத்துக்கொள்ளவில்லை.  சுவாசித்தால் மட்டுமே வாழ்தல் ஆகிவிடுமா? படுக்கையிலிருந்து எழுவதும், உண்பதும், பணத்துக்காக ஓடுவதும் உறங்குவதும், உடல் தேவையின்பால் இச்சை கொள்வதுமே வாழ்க்கை என்று நம்பும் உங்களைப் பார்த்து கேட்க என்னிடம் ஒரேயொரு கேள்விதான் இருக்கிறது. நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா? பிழைத்துக்கொண்டிருக்கிறீர்களா?

நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை கர்வமாக சொல்வேன் என் அன்பே. எனக்குப் பிடித்தவனுடன் எனக்குப் பிடித்த மாதிரி வாழ்கிறேன் என் அன்பே. ’நான் தான் உன் அருகில் கூட இல்லையே .. பின் எப்படி வாழ்கிறேன் என்று சொல்வாய்…. அறிவில்லையா உனக்கு?’ என்று தானே கேட்கப் போகிறீர்கள்? உங்கள் கண்ணின் ஒளி என்னில் முழுவதுமாய் வியாபித்திருக்கிறது அன்பே. அந்த ஒளியுடன்தான் பெருங்காதலுடன் பேரன்புடன் பெரும் உவகையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
ஒரு மழை இரவில், ஆள் அரவமற்ற தெருவில் என் கைகளை இறுகப் பற்றி, உன் சுடும் மூச்சு என் வலது காதின் ஓரத்தில் பட்டு தீ ஜ்வாலையை  எரியச் செய்ததே… அந்த தழல் இன்னும் அணையவே இல்லை என் அன்பே… இன்னும் அப்படியே தகித்துக்கொண்டுத்தான் இருக்கிறது. அது அணையவும் அணையாது.
அதே இரவில் தான் என் வலதுகரம் பற்றி உன் மார்மேல் வைத்து உன் இதய துடிப்பை உணரச் சொன்னாய். இன்னமும் என் உள்ளங்கையில் அது அப்படியேதான் துடித்துக்கொண்டிருக்கிறது. அதன் துடிப்பை உங்களால் ஒருபோதும் உணரமுடியாது.

ஒரு பேருந்து பயணத்தில் என்னருகில் அமர்ந்துகொண்டு, உங்கள் அம்மாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தீர்கள். நான் வாய்மூடி கேட்டுக்கொண்டே இருந்தேன். அது அப்போது ஒரு இசைக்குறிப்பை போலவே இருந்தது. இப்பவும் அப்படித்தான். அதே பயணத்தில் தான் மாலைப் பொழுதில் சூரியன் மஞ்சள் வண்ணம் பூசிய போது, அதன் தூரத்தில் இரு மேகங்கள் ஒன்றுக்குள் ஒன்று கலந்த கணம் என் கையை இறுகப் பிடித்து அழுத்திக்கொண்டே இருந்தீர்கள். சிறிது நேரம் கழித்துத்தான் உணர்ந்தோம்… நாம் கண்மூடி லயித்துக் கிடந்ததை. இன்னமும் அப்படியேதான் லயிக்கிறேன் மேகங்கள் கூடுவதைக் காணும் பொழுதெல்லாம்.

அந்த பேருந்து பயணத்தை தூரமாக்க பெயர் தெரியாத ஊருக்கு, இதுவரை நாம் பார்த்திராத ஊருக்குப் பயணமானோம். அப்போது நமக்கிடையே நீல நெருப்பொன்று எரிவதை உணர்ந்த நாம், முத்தமிட்டோம். முதன்முதலாக என் கன்னத்தில் முத்தமிட்டீர்கள்.  முத்தமிட்ட போது, உங்கள் கண்ணில் நீர் சுரந்தது. அந்த முதல் முத்தத்தில் கரைந்த தித்திப்பு நிமிஷங்கள் பொக்கிஷமாய், யாராலும் அழிக்கவே முடியாத இடத்தில் மிகவும் பத்திரமாக இருக்கின்றன. எப்போதும் அவை பத்திரமாக இருக்கும். யாராலும் அதை திருட முடியாது, உங்களால் கூட!.

இப்படி பலநூறு சந்தோஷங்களை சேமித்து வைத்திருக்கிறேன். எனக்கு அவை செல்வங்கள், பொக்கிஷங்கள், சந்தோஷ கிடங்குகள். யார் என்ன சொன்னால் என்ன? அவைதான் எனக்கே எனக்கேயான ஆனந்த பொக்கிஷங்கள்.


’’இத்தனை வருடங்கள் கழித்து எதற்கு பழைய கதையை பேசிக்கொண்டிருக்கிறாய்? தலையில் நரை விழுந்துவிட்டது. மகளுக்கு கல்யாணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கிறேன். இந்த சமயத்தில் எனக்கு என் இந்த கடிதம் என்று தானே கேட்கிறீர்கள்? இப்போது கூட இதை நான் கேட்காவிட்டால் எப்போது இனி உங்களிடம் கேட்க முடியும்? 
என் தெருவின் ஓரத்தில் மஞ்சள் கொன்றைப் பூக்கள் படுக்கை விரித்தது போல கொட்டிக் கிடந்த ஒரு மதியப் பொழுதில் மூச்சிரைக்க ஓடிவந்து சொன்னீர்கள். கண்ணீருடன் சொன்னீர்கள்… ’என்னால் உன்னை கல்யாணம் செய்துகொள்ள முடியாது. காரணம் கேட்கவில்லை நான். ’அம்மா காரணம்’ என்றீர்கள், ’அண்ணன் காரணம்’ என்றீர்கள். எனக்கு எதுவுமே காதுக்குள் போகவில்லை. கண்கள் முழுக்க துயரத்தை அப்பிக்கொண்டு அழுதுகொண்டே சொன்னீர்கள். அந்த அழுகையில் என் மீது நீங்கள் கொண்டிருந்த காதலை கரைத்துவிட்டீர்கள். அப்படிக் கரைக்கத்தான்  அழுதீர்களா என்று கேட்கவல்ல இந்தக் கடிதம்?

பிறகு எதற்குத்தான் இந்த கடிதம்? என்றுதானே கேட்கிறீர்கள்? ஒரே ஒரு கேள்விக்காகத்தான். அழுகையில் அனைத்தையும் கரைத்துக்கொண்ட நிமிடத்தில் இருந்து நீங்கள் நேசிக்கப்பட்டு இருக்கிறீர்களா? ஆத்மார்த்தமாக உங்கள் துணையை அணைத்திருக்கிறீர்களா? நிலவின் ஒளியில் முன் நெற்றியில் முத்தமிட்டு, முயங்கியிருக்கிறீர்களா? மௌனத்தின் மொழியில் காதலித்திருக்கிறீர்களா? மடியில் படுத்து, கண்கள் பார்த்து பார்த்து பேசி பேசி லயித்து இருக்கிறீர்களா?
நீங்கள் காதலிக்கப்படவும் இல்லை; ஆத்மார்த்தமாக நேசிக்கவும் இல்லை. அதிகாலையில் துணையின் தலை வருடிக் கொடுத்து நெஞ்சம் திளைக்கத் திளைக்க அணைத்து உச்சிமுகர்ந்திருக்கிறீர்களா? துணைக்கு ஒரு நேரம் ஒரு கை சோறு ஊட்டிவிட்டிருக்கிறீர்களா? இதில் ஏதாவது ஒன்றையாவது செய்திருக்கிறீர்களா?


’பணத்தின் பின்னால் ஓடத் துவங்கிய பின் இதற்கெல்லாம் நேரமெங்கே இருக்கிறது?’ என்று எல்லோரையும் போல நீங்கள் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கடிதம் என் அன்பே.

எந்த எல்லைகளுமின்றி நிபந்தனைகள் ஏதுமற்ற நேசித்தலின் உன்னதம் தெரியாமல் வாழ்க்கையின் பாதியை கடந்துவிட்ட உங்களுக்கு இதைச் சொல்லவே இந்தக் கடிதம் என் அன்பே! கட்டாயத்தின் பெயரில், ஊர் மெச்சுவதற்காகவுமா காதல்? உணர்வதற்கும், ஆராதிப்பதற்கும், வாழ்வதற்கும் தான் காதல். அந்த காதலை நீங்கள் உணரவே இல்லை என்பதை சொல்லவே இந்தக் கடிதம் என் அன்பே. இந்த உடம்பை மண் தின்பதற்கு முன்பு நேசித்துவிடுங்கள். உள்ளம் நிறைய, வழிய வழிய நேசித்துவிடுங்கள். வாழ்தலின் நோக்கம் நேசம்தான் எனதன்பே. பணத்துகாக, ஊருக்காக, உலகத்துக்காக, அவனுக்காக, இவனுக்காக என்றில்லாமல் உங்களுக்கே உங்களுக்காக நேசியுங்கள் அன்பே! நேசமே மானுடத்தின் அறம் என்பதை சொல்லவே இந்தக் கடிதம். இதை நீங்கள் தான் எனக்குள் ஒளிரச் செய்தீர்கள். அப்படி எனக்குள் ஒளிர்ந்துகொண்டிருக்கும் உங்கள் கண்ணின் ஒளியை உங்களுக்கே திருப்பி அனுப்புகிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு நெடும் கடிதத்தை எழுத எழுத அவளின் மனம் துள்ளிக் குதிப்பதை உணர்ந்தாள். மனதின் எல்லா திசைகளிலும் பேரிரைச்சலுடன் ஒலித்துக்கொண்டிருந்த சத்தம் சட்டென அமைதியாவதை உணர்ந்தாள். அவனது உருவத்தை நினைவுக்கு கொண்டு வந்து கண் முன் நிறுத்தும் போராட்டத்தில் அவள் வெற்றி பெற்றாள். அவனுடைய உயரத்தைப் பார்த்து மயங்கிய தன் கண்களை தொட்டுப் பார்த்துக்கொண்டாள். எப்போதும் நிதானமாகப் பேசும் அவனுடைய பேச்சு தன் காதில் ஒலிப்பதை கேட்டாள்; கேட்டாள். கேட்க கேட்க தன் உலகம் அழகாகவதாக உணர்ந்தாள். ஒரு ரயில் பயணத்தில் அவன் மடியில் படுத்து உறங்கியதை நினைத்து சிரித்துக்கொண்டாள். இனி இப்படி சந்தர்ப்பம் வாய்க்குமா என்று நினைக்கும்போதே அவளுடைய சிறு கண்கள் கடலானது. 

மீண்டும் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள். ரயில் அசைந்து அசைந்து போய்க்கொண்டிருந்தது.
’’இந்த டிடிஆர் தெனமும் இந்த லூசு மூலி இப்படி முந்தானைய அவுத்துப் போட்டுட்டு வர்றத பாக்குறாரே… ஆம்பளைங்க கண்ணு பூரா இவ மார்மேல தான் இருக்கு… இவள எங்காச்சும் எறக்கி விடலாம்ல’’ சொன்னவளும் அவளது மாரைப் பார்த்தாள். ஏதோ ஒரு கோயில் சிற்பம் ஒன்று உயிரோடு எழுந்து வந்தது போலிருந்தது.

அந்த சிற்பத்தின்  மடியில் ஒரு பை இருந்தது. அதில் சில தாள்கள் இருந்தன. அவை இவளை ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் வாங்கியவள் என்றது. யார் நம்பப் போகிறார்கள்?


அவள் கடிதத்தை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தாள். அவளுடைய ஆங்கில கையெழுத்து நிஜமாகவே அத்துணை வடிவாக இருந்தது அவளது மார்புகளை விடவும்! 

1 கருத்து: