செவ்வாய், 21 ஜூன், 2016

ரோஸா பார்க்கர்

ந்த பெண் ஒரு சாதரண நிறுவனத்தில் தையல் வேலை செய்யும் ஊழியர். தினமும் வீட்டுக்கும் நிறுவனத்துக்கும் பேருந்தில்தான் சென்று வர வேண்டும். 1900ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாண்ட்கோமரி நகரில் ஒரு சட்டம் பிறப்பிக்கிறார்கள். அந்த சட்டத்தின் படி நகரப் பேருந்துகளில் அமெரிக்க வெள்ளையர்கள் பேருந்தில் அமர்ந்து வர வேண்டும். கறுப்பினத்தவருக்கு பேருந்தின் கடைசி வரிசை சீட்டுகள் மட்டுமே. அதுவும் அமெரிக்கர்கள் பேருந்தின் முன் வாசல், பின் வாசல் பின் வாசல் என எப்படி வேண்டுமானும் ஏறி வரலாம். ஆனால் கறுப்பினத்தவர்கள் பேருந்தின் பின் வாயிலின் வழியாகத்தான் ஏற வேண்டும் என்று ஏகப்பட்ட சட்டங்களை விதித்து இருந்தது. அதற்கு எல்லோரும் உடன்பட்டுத்தான் தினமும் பயணித்து வந்தார்கள்.
ரோஸா பார்க்கர் என்ற அந்த தையல் வேலை செய்யும் பெண்ணும் தினமும் அப்படித்தான் பயணித்து  வந்தார். கறுப்பினத்தில் பிறந்த காரணத்துக்காகவே அனுதினமும் அவமானத்தையும் நிராகரிப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அப்படிப்பட்ட புறக்கணிப்பை அவமானத்த்துக்கு அடிபணியாமல் போனால் என்ன ஆகும்? என்ன செய்வார்கள் அமெரிக்கர்கள் என்று ரோஸா சிந்திக்க ஆரம்பித்ததன் விளைவு, 1955ம் வருடம் டிசம்பர் 1ம் தேதி வெறும் 42 வயதான ரோஸா இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார். எப்படி? மாலை 6 மணி அளவில் நகரப் பேருந்தில் ஏறுகிறார். அவர் ஏறிய நிறுத்தத்தில் இருந்து மூன்றாவது நிறுத்தத்தில் நிறைய வெள்ளையர்கள் ஏறுகிறார்கள். அங்குள்ள சட்டப்படி, ரோஸா அந்த வெள்ளையர்களுக்கு இடம் கொடுத்துவிட்டு எழுந்து நின்று பயணம் செய்ய வேண்டும். வெள்ளையர்கள் நிற்கிறார்கள். ரோஸாவுடன் அருகில் உட்கார்ந்திருந்த மற்ற மூன்று, நான்கு கறுப்பினத்தவர்கள் எழுந்து நிற்கிறார்கள். ஆனால் ரோஸா இருந்த இடைத்த விட்டு நகரவே இல்லை. பேருந்து ஓட்டுநர் ஜேம்ஸ் எப். பிளேக் அங்கிருந்து சைகை காண்பிக்கிறார். ரோஸாவிடம் ’எழுந்து நில்’ என்கிறார். ரோஸா ’’நான் எதற்காக எழுந்து நிற்க வேண்டும்? என்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் கேள்வி கேட்கிறார். 


நீ இப்படி பேசினால், சட்டத்தை மீறுவதாக அர்த்தம். தெரியுமா? நீ இப்படியே உட்கார்ந்துகொண்டு வந்தால் நான் காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டி இருக்கும்” என்கிறார் நடத்துநர்.
ஓட்டுநர் ஜேம்ஸ் சொன்னது போல், போலீஸ் அடுத்த நிறுத்ததிலேயே வருகிறது. ரோஸாவைக் கைது செய்கிறது. ரோஸா எந்த உணர்வையும் வெளிக்காட்டாது காவல்துறையினருடன் செல்கிறார்.
அப்போது மாண்ட்கோமரி நகரத்து  கறுப்பின கிருஸ்துவ சபையில் வந்து சேர்ந்து இருக்கிறார் மார்ட்டின் லூதர் கிங். அவர் ’ரோஸாவின் கைதுக்கு எதிர்ப்பைக் காட்ட கறுப்பின மக்கள் யாரும் இனி நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டாம்” என்று கோரிக்கை விடுக்கிறார். பல ஆண்டுகளாக இனத்தின் பெயரால், நிறத்தின் பெயரால் அவமானத்தை மட்டுமே சுமந்து வந்த மக்களுக்கு இதுதான் சரியான தருணம், தங்கள் எதிர்ப்பை வெளிகாட்ட என்று முடிவு செய்கிறார்கள். யாருமே அந்த பேருந்துகளில் பயணம் செய்யவில்லை. ஒருநாள் அல்ல, இரண்டு நாள் அல்ல. 381 நாட்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள்.
இதற்கு இடையில் ரோஸா பார்க்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். சட்டத்தை மீறியதாக அரசு தரப்பு வக்கீல் வாதாடியபோது, ’ரோஸா எந்த தவறும் செய்யவில்லை, கறுப்பின மக்களுக்கு என்று இருந்த சீட்டில்தானே அமர்ந்து வந்தார், அதைதாண்டி அவர் ஒன்றும் செய்யவில்லையே’ என்று அவர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடி அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்தார்கள்.
இந்த நிகழ்வுதான் அமெரிக்காவின் நிற பேதத்துக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு அமெரிக்கவாழ் கறுப்பினத்தவரின் மனதிலும் விதைத்தது. அதன் நீட்சியாகத்தான் மார்ட்டின் லூதர் கிங் தன் போராட்டத்தை ஆரம்பித்தார்.
கறுப்பின பென்ணாக இருந்துகொண்டு அதுவும் ஒரு சாதரண தொழிலாளியாக இருந்துகொண்டு ஒரு ஒட்டுமொத்த நகரத்தை எதிர்த்தால் என்ன ஆகும்?



அவர் வேலை பார்த்த இடத்தில் அவரை வேலையிலிருந்து நீக்கினார்கள். அதே போல் ரோஸாவின் கணவர் ரேமண்ட் பார்க்ஸுக்கும் வேலை போனது. வேறுவழியின்றி அவர்கள் வாழ்ந்த நகரத்தை விட்டு வெர்ஜீனியாவில் உள்ள ஹேம்ப்டன் என்ற நகரத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். ரோஸாவின் இந்த எதிர்ப்புக் குணம் அவரை மனித உரிமைப் போராளியாக மாற்றியது. தினமும் பல கூட்டங்களில் கறுப்பின மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே உணர்ச்சிமிகுந்த உரைகளை ஆற்றினார். அந்த காலகட்டங்களில் பல்வேறு வேலைகளை செய்தார். ஒரு கல்வி நிறுவனத்தில் வேலை பார்த்தார். பிறகு ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கருக்கு செகரட்டரியாக வேலை பார்த்தார்.
பேசுவதற்காக கிடைக்கும் சொற்ப பணத்தையும் மக்களின் நலனுக்காகவே கொடுத்தார். நாளும் பொழுதும் பேசிக்கொண்டே இருந்த போதுதான் அவர் கணவர் 1977ல் தொண்டை புற்றுநோயால் இறந்து போனார். தன் தம்பி, தங்கைகளுடன் வசித்து வந்தார். அவருடைய தம்பியையும் புற்றுநோய்க்கு பலி கொடுத்தார். கடைசியில் தன் அம்மாவுடன் வாழ்ந்தார்.
தன் சொந்தவாழ்க்கையில் பொருளாதர பிரச்னைகளால் தவித்த போதும் அவர் கறுப்பின மக்களுக்காக உழைத்தார்; இடையாறாது பேசினார். ரோஸா கல்வி நிறுவனத்தை நிறுவி தன் பேச்சின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அந்த கல்வி நிறுவனத்துக்குக் கொடுத்தார். அமெரிக்க அரசின் உயரிய விருதான ’காங்கிரஸ்னல் கோல்ட் மெடல்” விருதைக் கொடுத்து அவரை கௌரவித்தது. ’மை ஸ்டோரி” என்று தன் சுயசரிதையை எழுதினார்.

அன்று அவர் பேருந்தில் எழ மறுத்து, அப்படியே உட்கார்ந்த்து இருந்ததால் தான் கறுப்பொன மக்கள் இன்று அமெரிக்காவிலொ நிமிர்ந்து நிற்கிறார்கள். அது ரோஸா பார்க்கரால்தானே சாத்தியமானது. இப்படியான சுயநலமற்ற போராட்ட குணம் நிறைந்த பெண்களால்தான் வீடும் உலகமும் நிமிர்ந்து நிற்கிறது

2 கருத்துகள்: