புதன், 22 ஜூன், 2016

தூங்கா மனம்

திலகா வளையலைக் கழற்றும்போது ஏற்கனவே கனத்து, கனன்று கொண்டிருந்த அவளின் இதயம் இன்னும் அதிகமாய் கனத்து சொல்லில் அடங்கா பாரத்தை நொடிக்கு நொடிக்கு ஏற்றிக் கொண்டிருந்தது. இந்த இரண்டு ஜோடி வளையல் ஆயா கொடுத்தது என்பதால் மட்டும் அல்ல; அது ஆயாவின் ரத்தம், வியர்வை, உழைப்பு, கனவு, நம்பிக்கை என அத்தனையும் கலந்து உருவாக்கப்பட்டவை. ‘ஒவ்வொரு அறுவடையின் போதும் ‘இந்த வாட்டி நாலு மூட்டை கூட கிடைச்சுடாதா” என்று குலசாமிக்கு தினம் தினம் வேண்டி, இரவும் பகலும் வயலிலேயே கிடையாகக் கிடந்து உழைத்து ஆசையாக செய்து கொடுத்த வளையல் இவை. 
‘திலகா ஆயா செஞ்சு கொடுத்த வளையலை விட இப்ப உன் புருஷன் உயிரு முக்கியமில்லையா?” என்று மனம் வழக்கம் போல் கேள்வி எழுப்பியதும் வளையலைக் கழட்டினாள்.  கழட்டும்போது, ‘இந்த ஆறு பவுனு வளையலை விட என் புருஷன் எனக்கு ரொம்ப முக்கியம், என் புள்ளைகளுக்கு அவரு இன்னமும் ரொம்ப முக்கியம். அதனால இந்த வளையல்னு இல்லை, இன்னும் என்கிட்டே இருக்குற அத்தனை பவுனு நகையையும் வித்து அவரை பொழைக்க வைக்கணும். பொழைக்க வைக்கணும்...” என்று மனதுக்கு பதில் சொல்வது போல் தன்னை தானே தேற்றிக் கொண்டாள்.  என்ன தேற்ற முயன்றாலும் மனது தேறுவதாக இல்லை. ‘பிழைப்பதற்கு ஐம்பது பர்சன்ட் தான் வாய்ப்பு இருக்கு, அதையும்  இருபத்திநாலு மணி நேரம் கழித்துதான் சொல்ல முடியும்’ என்று   டாக்டர்  கூப்பிட்டு சொன்னபோது கதறி அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை திலகாவுக்கு. டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்ததும் மனம் விட்டு கதறி கத்தி குரலெடுத்து அழுதபோது, அவளை  முன்பின் பார்த்தறியாதவர்கள் கூட அழுதார்கள்.  கதறலும் கண்ணீரும்  சில நேரங்களில் ஒரு தொற்று தான்! 
..........
‘எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் ஆயா” என்று பயத்தில்  கண்களில் நீர் முட்டிக்கொண்டு வர ஆயாவை இறுக்கமாக அனைத்துக்  கொண்டு அழுதது நினைவுக்கு வந்தது. ராஜன் திலகாவை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் தனது  அம்மா, அப்பா, அக்கா, மாமா என குடும்பம் சகிதமாக பெண் பார்க்க வந்தபோது திலகாவுக்கு ராஜனைப் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பிடிக்காமல் போவதற்கு வலுவான காரணம் என்ன என்று யோசித்து யோசித்து பார்த்தாலும் இதுதான் காரணம் என்று உறுதியாக சொல்லமுடியவில்லை. உயரம், நிறம், மூக்கு, கண் என்ற வெளிப்புற தோற்றத்தைவிட ஒருத்தருக்கு இன்னொருவரைப் பிடிக்க எதோ  ஒன்று தேவைப்படுகிறது. அது எது என்பதுதான் திலகாவின் குழப்பமாக இருந்தது. அந்தக் குழப்பம் தான் பயமாகி, கண்ணீராகி அழ வைத்தது. அந்த பயத்துடனேயே தான் ராஜனைக் கல்யாணம் செய்தாள்.
முதல் உறவு, அவன் மேல் இருந்த பயத்தை அவளுக்குள் இன்னும் அதிகப்படுத்தியது. நாள் போகப் போக அந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, அவனை ஏனோ  ரசிக்க ஆரம்பித்தாள். அந்த ரசனையே அவனை மெல்ல மெல்ல காதலிக்க வைத்தது. ‘நீ ஆணி வேர்; நான் அழகிய கிளை’ என்று தத்துப்பித்துக் கவிதை எழுத வைத்தது. முதல் பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்து இருந்த மூன்று  மாத  பிரிவை பெரும் சோகமாக கருதி, பல நேரங்களில் தனிமையில் அழவைத்தது. ‘டைமுக்கு சாப்பிட்டிங்களா.. நல்லா தூங்கினீங்களா” என்று ஒரே நாளில் பல கடிதங்களை எழுத வைத்தது. இருபது வருடங்கள் உயிருக்கு உயிராய் வாழ்ந்து வளர்த்த ஆயா, அம்மா, அப்பா சில நேரங்களில் அந்நியமாய் தெரிந்தார்கள்.
ராஜனை  சுற்றியே தனது உலகம் இருக்கிறது என்று நம்பியவள் ஒரு கட்டத்தில் ராஜன் மட்டுமே தனது அழகான அன்பான உலகம் என்று  கண் மூடித்தனமாக நம்பினாள். அந்த நம்பிக்கையையே தன் வாழ்வின் ஆகப் பெரிய சந்தோசம் என்றாள். தனக்குப் பிடித்த விஷயங்கள் மறந்து போய், ராஜனுக்குப் பிடித்த வியங்கள், எல்லாம் தனக்குப் பிடித்தவையாக மாற்றிக் கொண்டாள். ‘அப்படி மாற்றிக்கொள்வது கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் இல்லியா?” என்று அவள் மனம் கிண்டலாகக் கேள்வி எழுப்பினால்... ’பைத்தியக்காரத்தனைத்தையும்  காதலையும்  பிரிக்க முடியாது’ என்பாள். அதுதான் உண்மை என்றும் ஆணித்தரமாக நம்பினாள்.  அவரவர் மனதை மிஞ்சிய நண்பனும்  எதிரியும் இருக்கமுடியுமா?
..........
‘’நியுராலாஜி டாக்டர் உங்களை கூப்பிடுறார்’’ என்று திலகாவின் அருகில் வந்து ஒரு நர்ஸ் சொன்னபோது அவளுக்கு எழுந்து பத்தடி தூரத்தில் இருக்கும் டாக்டரின் ரூமுக்கு செல்வதற்கு கூட உடம்பிலும் மனதிலும் தேம்பில்லாதவளாக இருந்தாலும் உடம்பின் அத்தனை செல்களில் இருக்கும் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி முதல் அடி எடுத்து வைத்தாள்; நடந்தாள். அந்த நிமிடம் தான் அவள் வாழ்வின் பெரும்துயரம் தன்னை ஒரு கல்மலையின் பாரமாய்  அழுத்துவதாக உணர்ந்தாள். உலக உருண்டையே நம்பிக்கை அற்று, விரக்தியில் சுற்றிக்  கொண்டிருப்பதாய்   தோன்றியது அவளுக்கு.
‘’நீங்கதான் திலகாவா? கூட யாரும் வரலையா”” என்று கேட்ட நரம்பியல் நிபுணர், வெறும் நரம்பால் மட்டுமே ஆனவர் போல இருந்தார். ‘’ஆமாம் டாக்டர்’’ என்பது போல் இவள் தலை அசைத்தாள்.
’’உங்க ஹஸ்பண்ட் ஆபத்தான கட்டதைத் தாண்டிட்டார். ஆனா ‘மூளையில் கொஞ்சம் அடி பலமா பட்டிருக்கிறாதால அவரோட கை, கால் இயக்கம் முன்ன மாதிரி இருக்காது. ஒரு கட்டத்தில் செயல்படாம போனாலும் போகும். ஆனா அப்படி நிலைமை ரொம்ப மோசமா போயிடக் கூடாதுன்னா ஒரு மேஜர் ஆபரேஷன் செய்யணும். அதுக்கு கிட்டத்தட்ட ஐஞ்சாறு லட்சம் ஆகும். ஆபேரேஷன் முடிஞ்ச பிறகு அட்லீஸ்ட் ஒரு மாசம் இங்க இருக்கனும். ஆபரேஷன் பண்ணலாமா?”” என்று டாக்டர் கேட்டபோது,
‘’சரிங்க டாக்டர்’’ என்ற அவளது ஒற்றைச் சொல்லில் டன் கணக்கான நம்பிக்கையும், பணத்தை ரெடி பண்ண என்ன செய்வது என்கிற சுமையும் சம அளவில் இருந்தது.
அதே நம்பிக்கையுடனும் சுமையுடனும் உடனடியாக அப்பா, அம்மா போட்ட  நகைகளை யோசிக்காமல் விற்பதற்கு ஏற்பாடு செய்தாள். ஒரு கணம் தன் ஆறு வயது மகளின் சிரிப்பும் பெரிய கண்ணும் முகமும் நினைவில் வந்து பயமுறுத்தியது. ’போகட்டும்நான் உயிரோட இருந்தா இதை விட நாலு மடங்கு உனக்கு செய்வேன் மகளேஎன்று மனதுக்குள் சொல்லி தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.
.....
‘’திலகா நீ என்ன புடிச்சுத்தானே கல்யாணம் பண்ணின? எனக்கு முதன் முதலா உன்னப் பார்த்த போது பெரிசா எதுவும் தோணலை. ஆனா எங்கம்மாவுக்கு உன்னை ரொம்ப புடிச்சிருச்சு. ’என்ன அழகான கண்ணூடா அவளுக்குன்னு சொல்லிட்டே இருந்தாங்க. அவங்களுக்கு புடிச்சு போனதால ஆட்டோமேட்டிக்கா எனக்கும் புடிச்சுப் போயிருச்சுன்னு இப்பத் தோணுது.
எனக்கு ’வீடு படத்துல வர்ற அர்ச்சனா மாதிரி பொண்ணுங்கத்தான் ரொம்ப பிடிக்கும். அந்த முகவெட்டுல ஏதோ ஒரு கிறக்கம், ஒரு மயக்கம்.. ம்ம்ம்ம் அப்புறம் என்ன்னம்மோ இருக்கு. சொன்னா கோவிச்சுக்கமாட்டியே  அந்த மாதிரி பொண்ணு கிடைச்சா சும்மா சைட்டாவது அடிக்கணும். அட்லிஸ்ட் ஒரு நாலாவது அவ கூட இருக்கணும்” என்று ஒரு நடுராத்திரியில் ராஜா சொன்னபோது இருவரும் உறவு முடிந்த களைப்பிலும் திளைப்பிலும் இருந்தார்கள்.
‘’எனக்கு எந்த அப்செக்க்ஷனும் கிடையாது... ஏம்ப்பா  வீடு அர்ச்சனாகிட்டயே கேட்டுப் பாருங்களேன்” என்று திலகா சொன்னபோது அவள் வார்த்தையில் எந்த பொறாமையும்  இல்லை.
ஒருமுறை தாஜ்மஹால் பார்த்துவிட்டு வெளியே வரும்போது இவள் காதருகே வந்து  ’ஏய் திலக்ஸ் அங்க பாரேன்அந்த பொண்னு, நான் சொல்லுவேனே அந்த டேஸ்ட்ல இருக்குறா இல்ல. கொஞ்சம் நீள்வட்டமான முகம், பெரிய கண்ணு, கருப்பும் செவப்பும் இல்லாம ஒரு அழகு கலர்சான்ஸெ இல்லப்பாஎன்று சொன்ன நிமிடத்தில்  திலகா மும்தாஜைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.
இப்படி அவன் நீள்வட்ட முகம், கருப்பும் செவப்பும் இல்லாம அழகுக் கலர் என்று பலமுறை ரோடு, நடு வீடு, படுக்கை அறை, கோயில் என இடம், பொருள், ஏவல் இல்லாமல்…. சிலாகித்து, காதலாகி, கசிந்து உருகிக் கொண்டிருக்கும் வேளையில் எல்லாம் இவள் ராஜனின் மனைவியாக பொறாமைப்பட்டதும் இல்லை; செல்லமாய்க் கூட கோபித்துக் கொண்டதும் இல்லை.
...........
ராஜனுக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் முடிந்து, இரண்டு நாள் ஐசியுவில்,வைத்திருந்தார்கள். சொந்தகாரர்கள் நண்பர்கள் என எல்லோரும் கண்ணாடிக்கு வெளியே நின்று பார்த்துவிட்டு தில்காவுக்கு ஆறுதல் சொன்னார்கள். சிலர் ஆறுதல் என்ற பெயரில் பயமுறுத்தினார்கள்; சிலர் குழப்பினார்கள்; அழவைத்தார்கள்; பரிதாபப்பட்டார்கள். காலத்தை விட பெரிய பயங்கரவாதி யார் இருக்க முடியும்…? ஒரெ நிமிடத்தில் எல்லாவற்றையும் சட்டென கலைத்து அலங்கோலப்படுத்துகிறது. அடுக்கிவைத்து அழகும் செய்கிறது.
ராஜனால் ஒரு மாதத்துக்கு எழுந்து நடமாட முடியாது என்பதால் திலகாதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும். படுக்கையில் கம்ம்மோடில் அவன் போயிருந்த மலத்தை அள்ளிப் போட்ட சில நிமிடங்களில் அறுவெறுப்பு இல்லாமல் சாப்பிட முடிந்தது அவளால். சில நேரங்களில் மட்டும் தன்னை இப்படி தனியாகக் கஷ்டப்பட விட்டுவிட்டு போய்விட்ட அம்மா  அப்பாவை திட்டித் தீர்ப்பாள் மனதுக்குள். வேறு வழி?!
இருந்தாலும் ஆஸ்பிட்டலிலும் நர்ஸுகள் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். காலை ஆறு மணிக்கே வந்து ராஜனை சோப்புத் தண்ணியால் துடைத்து, படுத்தே இருப்பதால்பெட் சோர்வந்து விடாமல் இருக்க ஸ்பெஷல் பவுடர் போட்டு அப்பி, காலை, மாலை என இரண்டு வேலையும் பி.பி, டெம்ப்ரெச்சர் செக் பண்ணுவார்கள். ஆஸ்பத்திரி வாங்கும் காசுக்கு நர்ஸுகள் உயிரைக் கொடுத்து வேலை பார்ப்பார்கள். சரியான நேரத்துக்கு வந்து மாத்திரை, மருந்தைக் கொடுத்து கரெக்டாக சாப்பிடுகிறார்களா என்று செக் பண்ணுவார்கள். அப்படி பார்த்துப் பார்த்து சேவை செய்யும் நர்சுகளுக்கு அதிகபட்சம் இருபத்தைந்து வயதுக்குள் தான் இருக்கும். கொஞ்சம் கூட ஐயறவு இல்லாமல் ராஜனை நிர்வாண நிலையிலும் துடைத்து, தினமும் புது துணி மாற்றி விட்டுச் செல்வார்கள்.
திலகாதான் எந்த நிலையிலும் நொந்துகொள்ளாமல் தன் நிலைமை இதுதான், எல்லாக் கஷ்டத்தையும் ராஜனுக்காகவும் மகளின் எதிர்காலத்துக்காகவும் தாங்கிக் கொண்டே ஆகவேண்டும்என்று மன உறுதியில் எந்த சுயபச்சாதபமும் கழிவிரக்கமும் இன்றி அலைந்துகொண்டே இருந்தாள்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை, காலையில் ஐந்து மணிக்கு ராஜன் திலகாவை எழுப்பினான்…’’திலகா கம்மோடை எடுத்திட்டு வர்றியா? லாய்லெட் வர்ற மாதிரி இருக்குஎன்றவுடன்  அவசரம் அவசரமாக எழுந்து கம்மோடை வைத்து, அவன் முடிச்சுட்டேன் எடுத்துடு’  என்று சொன்னதும், எடுத்து சுத்தம் செய்து விட்டு வந்தாள். வந்தவள், ஏங்க நர்ஸ் வந்த்தும் நான் வீட்டுக்கு போயிட்டு எட்டு மணிக்குள்ள  வந்துடுறேன். பக்கத்து ரூம்ல இருந்த ஒரு அம்மா சொன்னாங்க, மாட்டு வால் வாங்கி சூப் வச்சு குடிச்சா உடனே இடுப்பு எலும்பு கூடிடுமாம். அதனால அதை செஞ்சு எடுத்திட்டு வர்றேன். பாப்பாவுக்கு கொஞ்சம் சளி பிடிச்சிருக்கு அத்தை போன் பண்ணினாங்க. மருந்து வாங்கி கொடுத்திட்டு வர்றேங்க. புள்ளையப் பார்த்து நாலு நாள் ஆச்சுஎன்று சொன்னவள் தலையை வாராமல் கையாலேயே ஒதுக்கி, சேலை சரி செய்து கொண்டு வீட்டுக்கு ஓடினாள்.
இதுவரை கறிக்கடை பக்கமே போகாதவள் மாட்டு இறைச்சின்னு என்று சாக்பீஸால் போர்டு எழுதி வைத்திருந்த கடைக்கு சென்று மாட்டு வால் வாங்கி, குக்கரில் போட்டு வேக வைத்து சூப் செய்து, குழந்தையை குளிக்க வைத்து அத்தை சுட்டு வைத்திருந்த இட்லியை ஊட்டிவிட்டு, ’அப்பா வீட்டுக்கு சீக்கிரம் வந்திருவாருடா செல்லம்என்று சொன்ன போது தன்னையும் மீறி கட்டுடைத்து வந்த அழுகையை மகளின் நெஞ்சுக்குள் வைத்து புதைத்துக் கொண்டு வெளியேறினாள். இத்தனை செய்தவள் தன் வாயில் ஒரு இட்லியை பிட்டுப் போட மறாந்துவிட்டாள்.
அடித்துப் பிடித்து ராஜனின் அறைக்குள் நுழைத்தான். ராஜனுக்கு நர்ஸ் காலையில் சாப்பாட்டுக்கு அப்புறம் போட வேண்டிய மாத்திரிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். இவள் ஆரம்பித்தால்… ’ஏங்க சூப்பைக் குடிச்சுட்டு அப்புறம் இட்லியை சாப்பிடுங்க. உங்களுக்கு புடிச்ச தக்காளி குருமாஎன்று சொன்னவள் ராஜனைப் பார்த்தாள். ராஜன் இவள் சொன்னதை கவனித்த்தாகத் தெரியவில்லை. மீண்டும் கொஞ்சம் சத்தமாக ’’ஏங்க பாப்புக் குட்டி அப்பா இன்னிக்கு வந்துடுவாராம்மாநான் சாமிகிட்ட தினமும் கேட்டுகிட்டே இருக்கேன் எங்கப்பா இன்னிக்கு வீட்டுக்கு வந்திடுவாரான்னு அம்புட்டு பாவமா சொல்லுதுங்க. புள்ள அப்படிக் கேட்டதும் என் உயிரே என்னமோ ஆன மாதிரி இருந்துச்சுங்க…”” என்றவள் மீண்டும் ராஜனை கூர்ந்து கவனித்தாள். ராஜனுக்கு இவள் பேசிய எதுவும் காதுக்குள் போன அறிகுறி இருப்பதாய் தெரியவில்லை.
 நர்ஸ் மாத்திரைகளை எடுத்து வைத்துவிட்டு, ’மாத்திரை சாப்பிட்டு முடிச்சதும் சொல்லுங்கஒரு ஐவி ஊசி போடவேண்டியிருக்கு”  என்று சொல்லி விட்டுப் போனவளையே ராஜன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

’’திலகா இவங்களப் பார்த்தா… ’வீடு அர்ச்சனாமாதிரியே இருக்கா  இல்ல. அதே முகவெட்டு, கறுப்பும் செவப்பும் இல்லாத அழகுக் கலர்….’’ ராஜன் சிலாகித்துக் கொண்டிருந்த அந்த நொடியில் திலகாவுக்குள் ஏதோ ஒன்று வெடிக்க ஆரம்பித்திருந்தது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக