செவ்வாய், 21 ஜூன், 2016

வங்காரி மாத்தாய்

ங்காரி மாத்தாயின் இளமை காலம் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகள் அனுபவிக்கும் எல்லா துயர்களையும் கொண்டதாகத்தான் இருந்தது. ஆனால் அதையும் மீறித்தான் கிருஸ்துவ மிஷன் அமைப்புகளின் உதவியுடன் படித்தார். கால்நடை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று, நைரோபி பல்கலை கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் வங்கி மாத்தாய் என்பவருடன் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு, வேலையை தொடர்ந்த வங்காரி, தான் வேலை பார்த்த கல்லூரியில் பணிபுரியும் பெண்களின் சம உரிமைக்காகப் போராடினார். அந்த போராட்டக் குணம் தென் ஆப்பிரிக்காவில் இருந்த பல சிவில் உரிமை அமைப்புகளுடன் சேர்ந்து பணிபுரிய வைத்தது. இதற்கு இடையில் வங்காரியின் கணவர் பார்லிமெண்ட் எலக்‌ஷனில் நின்று முதல் முறை தோற்றுப் போனார். இரண்டாம் முறை  வெற்றி பெற்றார்.  அப்போதுதான் அவர் வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை அளிப்பதாகக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற, வங்காரி மரக்கன்றுகள் நடும்திட்டத்தை உருவாக்கினார். அதுதான் உலகத்துக்கே வழிகாட்டியான ‘Green Belt” இயக்கமாக மாறியது.

வங்காரியின் போராட்டக் குணம்தான் அவருடைய இல்வாழ்க்கையை குலைக்கும் கோடாரியாக அமைந்தது. பத்தாண்டுகளைக் கூட முழுமையாக நிறைவு செய்யாத இல்வாழ்க்கையில் இறுதியில் அவருடைய கணவர் விவாகரத்துக் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதற்காக அவர் சொன்ன காரணம், ’இத்தனை மன உறுதியும் போராட்ட குணமும் கொண்ட பெண்ணுடன் என்னால் வாழ்வது சாத்தியம் இல்லை” என்று சொன்னார். அப்போதும் மன உறுதி குலையாத வங்காரி, தொடர்ந்து தன் மக்களுக்காக உழைக்க ஆரம்பித்தார்.

சூழல் அழிக்கப்படும் போது அதனால் பெருமளவில் பாதிக்கப்டுவது பெண்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த அவர், தன்னுடைய கல்லூரி வேலையை உதறித் தள்ளினார். முழுமூச்சாக மரக்கன்றுகள் நடுவதற்கு பெண்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அவரைப் பார்த்து,’பெண்களுக்கு மரக்கன்றுகள் வளர்த்து நடுவது பற்றி எல்லாம் தெரியாது. அதெல்லாம் வனத்துறையால் மட்டுமே சாத்தியம்”  என்று குதர்க்கமாகவும் இகழ்வாகவும் பேசினார்கள் வனத்துறை அதிகாரிகள்.  ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல், அவற்றை எல்லாம் தொடர்ந்து போராடுவதற்கான  ஊக்க மருந்தாக நினைத்து இரவு பகல் பாராது மரக்கன்றுகள் நட்டார். கென்யநாட்டின் ’தேசிய பெண்கள் கமிஷனு’டன் இணைந்து கிராமப் பெண் குழுக்களுக்கு பயிற்சி கொடுத்தார். அந்த சிறு குழு கிராமத்தில் இருக்கும் மற்றொரு பெண் குழுவுக்கு பயிற்சி கொடுக்கும். இப்படியாக 35 வருடங்களில் பல கோடி மரக்கன்றுகளை வளர்த்து நட்டனர். அதுமட்டும் இல்லாமல் 6000க்கும் மேற்பட்ட நாற்றங்கால்களை Green belt இயக்கப் பெண்கள் பராமரித்தனர். இது எத்தனை பெரிய சாதனை.! இந்த மரக்கன்று நடும் சக்தி, தங்களின் எதிர்காலத்தை தங்கள் கைகளாலேயே சக்திமிக்கதாகவும் நம்பிக்கை மிக்கதாகவும் மாற்றமுடியும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது.
1980, 90களில் கென்யாவை ஆண்ட சர்வாதிகாரி டேனியல் அராப் மோயின் அதிகாரத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராக வங்காரி மாத்தாய் குரல் கொடுக்க ஆரம்பித்தார். அதற்காக அவர் சொன்ன காரணம் தான் மிக உண்மையும் நேர்மையுமானது. ’நாட்டு மக்களிடம் அதிகாரத்தை வழங்கி, ’இந்த இயற்கை வளங்கள் எல்லாம் உங்களுடையதுதான்” என்று சொல்லி உணர வைத்து, இயற்கை வளங்களை அவர்களை வைத்துதான் பாதுகாக்க வேண்டும்” என்ற முழக்கத்தை அவர் ஓங்கி ஒலித்த போது அவருக்கும், சர்வாதிகாரி டேனியலுக்கும் இடையே மோதல் ஆரம்பித்தது. அந்த மோதல் அவரை அரசியலில் பங்கெடுக்க வைத்தது.

அந்த சமயத்தில்தான் டேனியல் தன் கட்சி அலுவலகத்துக்காக நெடிதுயர்ந்த 62 மாடிக் கட்டிடம் கட்ட திட்டம் தீட்டினார். அதற்காக நைரோபி நகரில் இருந்த உருகு என்ற பெரிய பூங்காவை அழிக்கத் திட்டமிட்டார். அதனை எதிர்த்து வங்காரி பெரும் போராட்டம் நடத்தினார். அவர் மீதும் போராட்ட்த்தில் பங்கு பெற்ற பெண்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது, கண்னீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. கொடூரத்தின் உச்சமாக அவர்கள் பாதாள சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தின் யுக்தியாக சிறையில் அரசியல் கைதிகளாக இருந்தவர்களின் அம்மாக்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை உருவாக்கி போராடி சிறையில் இருந்தவர்களை மீட்டு எடுத்தனர். வங்காரியின் அசைக்க முடியாத உறுதி கண்டு அச்சமுற்ற வெளிநாட்டுக் கம்பெனிகள், 62 மாடிக் கட்டிடம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டன.

அதன் பிறகு பல போராட்டங்களில் பலமுறை சிறைக்கு சென்றார் வங்காரி. அதற்கு காரணமாக இருந்தவர் டேனியல். இந்த போரட்டங்கள் அவரை அரசியலில் நுழைய வைத்தது.. அதன் காரணமாக 1997ல் தேசிய நாடளுமன்ற உறுப்பினர் பதவிக்கும், கென்ய லிபரல் கட்சியின் அதிபர் வேட்பளராகவும் பலரின் வற்புறுத்தலின் பேரில் போட்டியிட சம்மதித்தார். ஆனால் தேர்தலுக்கு சிலநாட்கள் இருக்கும் போது, அவருக்குத் தெரியாமலேயே அவரைப் போட்டியில் இருந்து அவரது கட்சி விலக்கி விட்டது. இருந்த போதும் மனம் தளராத வங்காரி கென்யாவில் 2002ல் நடைபெற்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டவருக்கு உலகமே ஆச்சர்யப்படும் வகையில் 98 சதவிகித ஒட்டுக்கள் விழுந்தன.  கென்யாவில் கிபாகி தலைமையில் புதிய அரசு அமைந்ததும் வங்காரிக்கு சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், கானுயிர்களுக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தனது இயக்கத்தின் வழியாக கற்றுக்கொண்ட கொள்கைகளான, ’அடிமட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும், எந்த முடிவையும் மக்களின் பங்கேற்புடன்தான் எடுக்க வேண்டும்” என்ற கொள்கைகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டார்.

பெண்களின் உரிமைகளுக்காக எந்த சட்டமும் இல்லாமல் இருந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பாகவும் சம உரிமையுடனும் வாழ சட்டம் கொண்டு வர பாடுபட்டார். அதன் காரணமாக இன்று கென்யாவில் அரசியலில் ஈடுபடும் பெண்களின் பங்கு அதிகரித்து இருக்கிறது. பெண்கள் கல்வி கற்று, வேலைக்கு செல்வதால் அவர்களின் சமூக, பொருளாதர நிலை மேம்பட்டு இருக்கிறது.

வங்காரி பல சர்வதேச அமைப்புகளில் பணியாற்றியுள்ளார். தன் வாழ்நாள் முழுதும் சுற்றுச் சுழலுக்காக உழைத்துக்கொண்டுருந்தார். பல ஆயிரம் பேருக்கு வாழும் உதாரணமாக வாழ்ந்தவருக்கு 2004ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பல சர்வதேச அளவிலான விருதுகளையும் பெற்ற வங்காரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2011 செப்டம்பர் 25ம் தேதி இறந்தார். இல்லை, இன்னும் நம் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

வங்காரி தன் வாழ்விலிருந்து சொன்னது, ”சம்பவங்கள் உனக்கு எதிர்மறையாகி நிற்கும் போது, மூலையில் முடங்கி உட்கார்ந்து வாழ்க்கை முழுவதும் புலம்பிக்கொண்டு இருக்காதே. எழுந்து நட… தொடர்ந்து நட… இனி எதிர்வரும் பாதை கஷ்டமானதாக இருக்காது என்ற நம்பிக்கையுடன் நட”

அப்படி ஒரு நம்பிக்கையுடன் நாமும் நடப்போம்!


(இன்னும் பேசுவோம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக