ஞாயிறு, 19 ஜூன், 2016

வங்காரி மாத்தாய்


பூமி உருண்டை அதன் பாதையில் அச்சுப் பிசகாமல் ஒரே ஒத்திசைவில் அழகாகவும் அமைதியாகவும் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த பூமிக்குள் நடப்பவை எல்லாம் ஒரே ஒத்திசைவில் இருப்பதில்லை. பூமிப் பந்து ஏழு கண்டங்களையும்,….. நாடுகளையும், பல ஆயிரம் மொழி பேசும் மக்களையும், பல்வேறு கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது. உலக உருண்டை அமைதியாக சுற்றிக் கொண்டிருக்கும் தருணத்தில் அதன்  மூலையில்  எங்காவது ஒரு பகுதியில் சமாதனம் குலைந்து, ஒற்றுமை அழிந்து போராட்டங்கள் வெடிகின்றன. போர் சூழ்ந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தி அழிவில் நிறுத்தி கொடும் மரணத்தை ஈவு இரக்கமின்றி கொடு்த்துச் செல்கிறது. ஆனால் இம்மாதிரியான கடும் நெருக்கடியான சூழல்களில் எல்லாம் ஏதோ ஒரு பெண்ணின் உறுதியான போராட்டம், நெஞ்சுறுதி இந்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கி கேள்வி கேட்டு, அங்கு அமைதியையும் அன்பையும் விதைக்கிறது. ஆனால் அந்த அமைதியை உருவாக்க அவர்கள் எதிர்கொள்லும் வலியும், வதையும் மிக அதிகம். ஆனால் அந்த வலிகளையும் வதைகளையும் போராட்டங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி இந்த உலகை நேர்பட நிமிர்த்திய பெண்கள் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் வழிநெடுகிலும் உள்ளார்கள். அப்படியான சில பெண்களின் போராட்டப் பக்கங்களைப் புரட்டுவதே இந்த தொடரின் நோக்கம். இருபத்தியின்றாம் நூற்றாண்டின் இரும்பு பெண்மணியாக நம் நினைவில் முதலில் வரும் வங்காரி மாத்தாய் பற்றி பேசுவோம்.

யார் இந்த வங்காரி மாத்தாய்?
’பெரும் கானகத்து சிட்டுக்குருவியாகவே இருக்க விரும்புகிறேன்” என்று எளிமையாக சொன்ன மிக வலிமையான மனுஷி. கென்ய நாட்டுப் பெண்களின் துயரை மரம் நட்டு, வளர்த்து, அதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்று இந்த உலகத்துக்கு உணர்த்தியவர்.
இவரின் முன்னெடுப்பாலும் அயராத உழைப்பாலும் கென்யாவில் 14 கோடிக்கும் மேலாக மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்த 14 கோடி மரங்களை கென்யா  முழுக்க நட வேண்டிய தேவை ஏன் வந்தது? என்று கேட்கத் தோன்றும்.
இன்று இந்தியாவில் எப்படி உணவு தானியங்கள் பயிரிடப்படும் ஏக்கர்களின் அளாவு குறைந்து பணாப்பயிர்களான கரும்பு, பருத்தி, தேயிலை, காபி போன்றவை அ்ிகமாகப் பயிரடப்படுகிறதோ அதே போலவே, வங்காரி மாத்தாய் கென்யாவில் வாழ்ந்த 1970களில் அங்கிருந்த பல பகுதிகளில் வனங்கள் அழிக்கப்பட்டு, மரங்கள் கொல்லப்பட்டு…. அந்த இடங்களில் எல்லாம் தேயிலையும் காபியும் பயிரடப்பட்டது.
மரங்கள் அழிக்கப்பட்டதால் அந்த மரங்களை தங்கள் பிழைப்புக்காக நம்பி இருந்த ஏழை மக்கள்  வறுமையின் பிடிக்குள் சிக்குண்டார்கள். தினமும் கால் வயிறு, அரைவயிறு உணவு கிடைப்பதே பெரும்பாடாக இருந்தது. ஆடு, மாடுகளை மேய்க்க நிலம் இல்லாமல் கால்நடைகளும் இறந்தன. மரங்களை கொன்றுவிட்டதால் மழைகாலங்களில் நிலத்தடி நீரை சேமிக்க முடியவில்லை. மண் அரிப்பு ஏற்பட்டு நிலங்கள் பாழாயின.  விவசாயம் பாதித்தது. அதன் எதிரொலியாக எங்கும் வறுமை.
இந்த கால கட்டத்தில்தான் தன் கல்லூரி மேல்படிப்பை முடித்து, பிட்ஸ்பர்க் பல்கலை கழகத்தில் முடித்து, சுதந்திரம் பெற்றிருந்த  கென்யாவுக்குள் காலடி எடுத்து வைக்கிறார். வீட்டுக்குள் வந்தவர் தன் பிழைப்பு, தன் சுகம், தன் குடும்பம்  என்று இருக்காமல் கிராமங்களுக்கு சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது அவர் பார்த்த கிராம வறுமை நிறைந்த, விவசாய செழுமை அழிக்கப்பட்ட கிராமங்களும் பட்டினியால் பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் நிலையும் வங்காரியின் மனநிலையை வெகுவாக பாதித்தது. இந்த நிலையை மாற்ற  தான் கற்ற இளநிலை உயிரியல் படிப்பின் மூலமும், கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில்  கால்நடை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெரும் சக்தியையும் வைத்து கென்ய மக்களின் வறுமையை மாற்ற நினைத்தார். அதற்காக  அவர் எத்தனை போராட்டங்களை அவமானங்களை சந்தித்தார்…? தன் மணவாழ்க்கையில் ஏற்பட்ட இடர்களை, துன்பங்களை எப்படி எதிர்கொண்டார்?

காத்திருங்கள்…. 

3 கருத்துகள்:

  1. அருமையான எழுத்து நடை உணர்வுகளுடன் உரையாடுகிறது

    பதிலளிநீக்கு
  2. சமூகம் அறியவேண்டிய ஆளுமையைப் பற்றி எல்லாத் தரப்பினரும் புரிந்துகொள்ளும்படி எளிமையான நடையில்.. நன்று! கென்ய மண் முன்னர் எப்படி இருந்தது, எப்படி, எந்தெந்த சக்திகளால் அழிக்கப்பட்டது போன்ற விவரத்தை அடுத்தடுத்து எதிர்பார்க்கிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அவசியமான தொடர். தொடர்ந்து எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு